Tuesday, 13 December 2011

இடஒதுக்கீட்டிற்கான புதிய விதை


எழுதியவர்


இடஒதுக்கீட்டிற்கான புதிய விதை
சமீபத்தில் அ.மார்க்ஸ் அவர்களுடைய ‘சிறு பான்மையினர் தொடர்பான ஆணையங்கள் பரிந் துரைகள் குறித்த பரிசீலனைகள்’ என்னும் நூலைப் படிக்க நேரிட்டது. முதலில் இந்த நூலைப் பதிப்பித்த ‘முரண்’ பதிப்பகத் தோழர் கள் இயக்கன், புகழன் இருவருக்குமே என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பேரா சிரியர் அ.மார்க்ஸ் அவர்களுடைய எழுத்து மிகக் கடினமானது என்கிற எனக்குள் நீண்ட நாட்களாக இருந்த ‘மாயை’யினை இந்நூல் தகர்த்தெறிகிறது. இருபெரும் பிரச்சினைகளான இடஒதுக்கீடு, பாபர் மசூதி இடிப்பு இவையிரண்டையும் மிக ஆழமாக இந்நூல் விளக்குகிறது.
நூலுக்குள் காணப்படும் சில சுவாரசியமான பக்கங்கள்:
“1940ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ‘மகாத்மா காந்தி’ தனது பொதுக்கூட்டங்களிலும், தனி உரை யாடல்களிலும் எதிர்கால இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதைத் தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டே இருந்தார். மத மாற்றங்களை அவர் ஏற்றுக் கொண்டதில்லை. ஆனால் மத மாற்றத் தடைச் சட்டம் என்கிற பேச்சு எழுந்த போது அதை எதிர்க்கிற முதல் நபராக அவரே விளங்கினார். மிகவும் ஆழமான மத உணர்வுடையவர் அவர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் ஒரு மதச்சார்பற்ற அரசியல் சட்டம் உருவாவதற்கு அவரே காரணமாக இருந் துள்ளார்.
இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு என்று சொல்வது பம்மாத்து வேலை என்கிற ஒரு குட்டு வைக்கிறார். அ.மார்க்ஸ். உதாரணத்திற்கு ‘சிறு பான்மையினருக்கு எதிராகப் பெரும்பான்மை மதத்தினரைத் திரட்டுவதற்கு மதம் மட்டுமின்றி வகுப்பு வன்முறைகளும் கூட இங்கே ஒரு வழி முறையாகப் பயன்படுத்தப்படுகின்றன. கலவரங் களுக்குப் பின் உடனடியாக நடைபெறவுள்ள தேர்தல்களில் வன்முறைக்குக் காரணமான வலது இந்து அமைப்புகள் வெற்றி பெறுவது வாடிக்கை யாகிவிட்டது’ என்கிறார்.
அருணாசலபிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங் களில் இந்து மதத்தில் இருந்து (கிறிஸ்துவ, முஸ்லிம்) அந்நிய மதங்களுக்கு மாறுவதை மட்டுமே தடை செய்கின்றன. பிற மதங்களில் இருந்து இந்து மதத்திற்குத் திரும்புவதைக் குற்ற மாக வரையறுப்பதில்லை. அதனைச் சட்ட பூர்வ மாக ஏற்கின்றன. எனவே இச்சட்டங்கள் மூலம் கிறிஸ்துவ, முஸ்லிம் மதப் பரப்பாளர்கள் மட் டுமே மிரட்டப்படுகின்றனர். இன்னொன்று, இன் னொரு பக்கம் தலித், பழங்குடி கிறிஸ்துவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்துக்களாக மதம் மாறு கின்றனர். இதை அவர்கள் வீடு திரும்புதல் (கர் வாபசா) என அழைக்கின்றனர். அரசியல் சட்டம் வழங்கியுள்ள இடஒதுக்கீட்டு உரிமைகள் கிறிஸ்துவ, முஸ்லிம் தலித்களுக்கு மறுக்கப்படும் நிலையை வலதுசாரி இந்து அமைப்புகள் தமது மத மாற்ற நடவடிக்கைகளுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. அரசுக்கும், மதத்திற்கும் எப்போதும் ஒரு நெருக்கமான உறவு இருந்து வருவதை நூலில் சுட்டிக் காட்டுகிறார் அ.மார்க்ஸ். ‘அரசு நடத்துகிற திறப்பு விழாக்கள், அடிக்கல் நாட்டு விழாக்கள்’ முதலியவற்றில் பூமி பூஜை போன்ற இந்து மதச் சடங்குகளுடன் நடத்தப்படுவது வழக்கமாகிவிட்டன. தினந் தோறும் பள்ளிகளில் வந்தேமாதரம் பாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மதச்சார்புடன் திரித்து எழுதப்பட்ட வரலாற்று நூல்கள் பாடத் திட்டங்களில் சேர்க்கப் பட்டுள்ளன. இதுபோன்ற பல விஷயங்களை வைத்துப் பார்க்கும்போது மதச்சார்பின்மை மரணித்து விட்டதாகக் கூறுகின்றார் அ.மார்க்ஸ்.
1871ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் ஹண்டர் கமிஷன் தொடங்கி தற்போதைய ரங்கநாத் மிஸ்ரா அறிக்கை வரை இடஒதுக்கீடு கோஷமிட்ட போதிலும் அரசு கொஞ்சங்கூடச் செவி சாய்க்கவில்லை என்பதை இந்நூல் தெளி வாகப் பல இடங்களில் முன் வைக்கிறது.
ரங்கநாத் மிஸ்ரா ஆணைய அறிக்கையில் வலி யுறுத்தப்படுகிற இடஒதுக்கீடு மிக முக்கியமான கோரிக்கை ஆகும். கோரிக்கை விவரம்:
சிறுபான்மையினருக்கு 15 சதவீத இடஒதுக் கீட்டில் 10 சதத்தை முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட வேண்டும். மீதமுள்ள 5 சதத்தை சிறுபான்மை யினருக்கு அளிக்கப்பட வேண்டும். சிறுபான்மை யினரில் 73 சதம் முஸ்லிம்கள் என்பதால்). இந்த இடஒதுக்கீட்டில் சிறிய மாறுதல்களைச் செய்து கொள்ளலாம். ஒதுக்கப்பட்ட 10 சத இடங்களைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு முஸ்லிம் மாணவர்கள் இல்லையெனில் மிஞ்சுகிற காலி இடங்களைப் பிற சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடம் கிடைக்காத பட்சத்தில் அவர்களுக்கு அளிக் கலாம். எக்காரணத்தைக் கொண்டும் ஒதுக்கப் பட்ட 15 சத இடங்களைப் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்கக்கூடாது. அதே சமயம் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் விஷயத்தில் கடைப்பிடிப்பது போலச் சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் தம் தகுதி அடிப்படையில் மற்றவர் களுடன் போட்டியிட்டு (பொது ஒதுக்கீட்டில்) இடம் பெற்றால், இந்த 15 சதவீத இடஒதுக்கீட் டினை, அதில் அவர்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது. அதே போலச் சிறுபான்மை யோர் நலனுக்காகச் செயல்படும் அனைத்து நிறுவனங்கள், மத்திய மாநில சிறுபான்மையோர் ஆணையங்கள் எல்லாம் சந்திக்கும் குவி மையங்களை எல்லா மாவட்டங்களிலும் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் வல்லுநர்கள் அடங்கிய சிறுபான்மையோர் நலக்குழுக்களை உருவாக்க வேண்டும்.
“இதுபோலச் சிறுபான்மையோர் நலனுக்காக அமைக்கப்படும் குழுவிலாவது சிறுபான்மையின ருக்கு இடம் அளிக்க வேண்டும். அப்போதுதான் ஆணையங்கள் மீதான நம்பிக்கை பெருகும்.
‘விடியல் வெள்ளி’, ‘சமநிலைச் சமுதாயம்’ ஆகிய இதழ்களில் தொடர்ந்து வெளியான கட்டு ரைகளைத் தொகுத்து நூலாக்கப்பட்டுள்ளது. பதிப்பகத்தாரின் முதல் முயற்சியாக இந்நூல் சொல்லப்பட்டாலும் ‘இடஒதுக்கீடு’ என்கிற ஒரு மாபெரும் போராட்டமிக்க விஷயத்தை அலசும் விதமாகக் கட்டுரைகளை நூலாகப் பிரசுரித்த ‘முரண்’ பதிப்பகத் தோழர்களைக் கை குலுக்கி எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இடஒதுக்கீடு குறித்துப் பல்வேறு இடங்களில் ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் வலியுறுத்தும் கோரிக்கைகள் வழியாக வைக்கப்படும் வாதங் களைப் பார்க்கும்போதும், தனிப்பட்ட சில வாதங் களை முன் வைக்கும் வேளையிலும் அ.மார்க்ஸ் ஒரு வழக்கறிஞராகக் காட்சியளிக்கிறார்.
72 பக்க சிறு நூலாக இருந்தாலும், இந்தி யாவில் சிறுபான்மையோர் மீது அரசு கவனம் செலுத்திடவும், எதிர்காலத்தில் சிறுபான்மை யோர் மீது அதிக அக்கறை காட்டுவதற்கு அரசுக்கு நல்வழிகாட்டியாகவும் இந்நூல் திகழும். அதற்கான தகுதி, அடையாளம் எல்லாமும் இருக்கிறது.
நூல்: சிறுபான்மையினர் தொடர்பான ஆணையங்கள் பரிந்துரைகள் குறித்த பரிசீலனைகள்
ஆசிரியர் : அ.மார்க்ஸ்
வெளியீடு : முரண் பதிப்பகம்
95/202, கால்வாய்க் கரை சாலை
இந்திரா நகர், அடையாறு
சென்னை - 600 020.

Friday, 19 August 2011

மதங்கள் நமக்குத் தந்த (மிச்சம்) உச்சம்

“குஜராத் பயங்கரவாதத்தில் பெற்ற தாயும், தாலி கட்டிக் கொண்ட மனைவியும் முஸ்லிம் பெண்களைக் கற்பழித்து வரச்சொல்லி தன் மகனை, தன் கணவனை அனுப்பி வைத்திருக்கிறார்கள். எப்போதும் துடித்து நிற்கும் ஆண்குறிகளுக்கு இதைவிட வேறென்ன பேரானந்தம் வேண்டும்?”


நகரமே ஓநாய்கள் ஊளையிடும் பாலைவனம் போல
களந்தை பீர் முகம்மது

ஃபித்தௌஸ் ராஜகுமாரன் கொந்தளிப்பான சூழல்கொண்ட மண்ணில் வாழ்பவர். இன்னும் கொஞ்சம் நெருங்கிச் சொல்வதென்றால் பாசிசத்தின் குறியிலக்குகளில் அவரும் இருக்கக்கூடியவர். தமிழகத்தின் இதர முஸ்லிம் படைப்பாளிகளுக்கும் அவருக்குமான முககிய வேறுபாடு இது. எனவே, இந்தக் கதைகளை அவர் எழுதியே தீர வேண்டும். மதவாதம் வக்கரித்துப்போன சம்பவக் கொடூரங்களை இந்தக் கதைகள் படம்பிடித்துள்ளன. அவர் ஏற்கனவே எழுதிய கதைகளை அசைபோட்டவர்களுக்கு, இந்தக் கதைகளை ஏற்கின்ற மனப்பாங்கு வந்துவிடும்.

மதவாதமும் சாதீய வாதமும் நாம் விரும்பாத சுமைகள். ஆனால் எவனெவனோ அந்தச் சுமைகளை இழுத்து வந்து நம் தலைகளில் ஏற்றிவைத்து விடுகிறான்கள்; அவற்றைச் சுமக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார்கள். விரும்பாத அந்தச் சுமைகளின் கீழே நாம் அமுங்கி விடுகிறோம். வாழ்வின் ஒரு பகுதியை, ஒரு நாளை, ஒரு மணி நேரத்தைத அல்லது சில நிமிசங்களையாவது மதவாதத்தின் பக்கம் நின்று கழித்தவர்களாக நாம் வெளியேறுகிறம்; அல்லது பிறர் பார்வைகளில் நாம் அவ்வாறு தென்படு விடுகிறோம்! எவ்வளவு அருவருப்பான வாழ்க்கை இது? என்னுடைய மதத்தின் மீது நானும் வெறிகொண்டவனாக இருப்பதற்கே, எதிர்மதத்தின் வெறியன் விரும்புகிறான். என்னைக் கொலை செய்வதற்கான நியாயமான காரங்களை, அவன் இந்தச் சாய்விலிருந்துதானே பெறமுடியும்?

குஜராத் பயங்கரவாதத்தில் பெற்ற தாயும், தாலி கட்டிக் கொண்ட மனைவியும் முஸ்லிம் பெண்களைக் கற்பழித்து வரச்சொல்லி தன் மகனை, தன் கணவனை அனுப்பி வைத்திருக்கிறார்கள். எப்போதும் துடித்து நிற்கும் ஆண்குறிகளுக்கு இதைவிட வேறென்ன பேரானந்தம் வேண்டும்? சிற்றின்பச் சாகரம்தான் ஆன்மீகப் பேரின்பத்தின் நுழைவாயில் என்பதை முகமூடியில்லாத நித்யானந்தா, பிரேமானந்தா சுவாமிகளைப் போல நிரூபித்திருக்கின்றது குஜராத். மதங்கள் நமக்குத் தந்த உச்சம் இதுதான். ஃபிர்தௌஸ் ஏன் இவற்றையெல்லாம் எழுதினார் என்பதற்கு இவைதாம் காரணம்.

‘நகரமே ஓநாய்கள் ஊளையிடும் பாலைவனம்போல’ என்கிற தலைப்புக் கதைதான் தொகுப்பின் கடைசிக் கதை. மற்ற கதைகளின் தாங்கு சக்தியும் இதுதான். நம்முடைய உலகின் தார்மீகம் எவ்வளவு கோரமானது. நாம் அழிவின் விளிம்பில் ஓரம் சாய்ந்தவர்களாய் எப்படி ஒற்றைக்காலோடு நிற்கிறோம் என்பதை இந்தக் கதையை வாசிப்பதன் மூலம் புரிந்து கொள்கிறோம். விரக்தியின் மகா வெட்டவெளி அதன் சூன்யத்தைக் காட்டியே நம்மை அச்சுறுத்துகின்றது. அந்த வெறுமையை, நம்மை இழந்து நிற்கும் அந்த இருளைக் கச்சிதமாக வடித்திருக்கிறார் ராஜகுமாரன். இதயத்தின் மீதேறி நிற்கும் சுமையல்லவா?

கோவைக் கலவரச் சூழலைப் படைப்புகளுக்குக் கொண்டுவருவதில் ஆபத்தும் உள்ளது. இருதரப்பிற்கும் நடுவில் படைப்பாளி நிற்க வேண்டும். அதே சமயம் பலிபீடத்தில் பழி தீர்க்கப்படுகிற சமூகம் சார்ந்தவர், படைப்பின் வேகம் பித்துப் பிடித்த நிலையை எட்டிவிட்டால் அது தன்னுடைய கட்டுக்காவல்களை மீறிச் செல்லும். தன் சமூகத்தின் பிணங்களின் நெடி படைப்பின் மொழிவளத்தையும் கலைநயத்தையும் குதறிவிடலாகாது. ஃபிர்தௌஸ் தன்னை மிகவும் கட்டுப்படுத்தியிருக்கிறார்.

ஆன்மீகம் பற்றிப் பேசினால் அனைவருக்கும் மகிழ்ச்சியே. கூடுதலாக இரண்டொருமுறை கடவுளின் நாமத்தை உச்சரிக்க வாய்ப்புக் கிடைத்துவிடுகிறது. கோவில், குளம், தொழுகை, நோன்பு ஆகியவற்றோடு சம்மந்தப்பட்ட நபரை ஒழுக்கமுள்ளவராக, அன்புள்ளம் கொண்டவராக, அமைதிக்குப் பங்கம் தராதவராகக் கருதுவதுதான் மனித இயல்பு என்பதுபோல் ஆக்கிவைத்திருக்கிறோம். அதிலும் இந்தத் தன்மைகள் இளைஞர்களுக்கு இருக்குமென்றால் இன்னும் கொண்டாட்டம்தான். அதனால்தான் கோபாலனிடம் சொல்கிறார் ராவுத்தர், “இதென்ன இந்தத் தடவ பூரா இளவட்டங்களாவே தெரியுது. பசங்க திருந்திட்டாங்க போல”. அந்தத் திருந்திய பசங்கள்தான் மதக்கலவரத்தின் கர்த்தாக்கள். ராவுத்தரின் கடையே தீக்கிரையாகிவிடுகிறது. அரச மரத்தைக் கடையின் அருகில் நீரூற்றி வளர்த்தவர் ராவுத்தர். ஆனால், அதைக் கோயில் மரம் என்று சொந்தம் கொண்டாடுகிறது ஆன்மீக இளைஞர் கூட்டம். இந்த ஆன்மீக இளைஞர்கூட்டம் வைத்த நெருப்பில் இந்த அரச மரமும் - அதுதான் கோயில் மரமும் எரிந்து கருகுகிறது. இப்படித்தான் ஆகிவிடுகிறது ஆன்மீக வெறி! இத்தனை ஆண்டுகளாக இந்தக் கோயிலின் விசேசத்திற்காகவே டவுனிலிருந்து தன் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வருவாள் ராவுத்தரின் மகள் மும்தாஜ். இதை அவள் கணவன் ஜமால் கிண்டல் செய்யும்போது மும்தாஜ் சொல்கிறாள், “எங்க ஊர் கோயில் திருவிழாவ நா பாக்க வேண்டாமாக்கும்?” ஆன்மீக இளைஞர் கூட்டம் தீயிட்டது இந்த இனிய வாழ்க்கைக்கு!

நம் மனசாட்சிகளைக் கேள்விக்கு உள்ளாக்குவதுதான் ஃபிர்தௌஸின் வேலை. நீங்கள் எந்த இறைவனைத் தொழுகிறீர்கள் என்பதல்ல அவரின் கவலை. இந்தக் கதைகளை அணுகவேண்டிய முகவரி இதுதான். ஏராளமான வன்முறைகள், இலட்சக் கணக்கில் படுகொலைகள், இழப்புகள், நெருக்கடிகள், சர்வதேச அவமானங்கள், கண்டனங்கள் என நம்நாட்டைப் பாழாக்கும் இத்தனை இழிவுகள் நம்மைச் சூழும்போதும் நாடு மீண்டும் மீண்டும் அதனையே சந்தித்துக் கொண்டிருக்கிறதென்றால் என்ன அர்த்தம்? இந்த உள்ளுறைவைக் கண்டுபிடிக்கிற வேலை இலக்கியவாதிகளுக்கும் இருக்கிறது. அந்தப் பகுதியை அல்லது கடமையை நிறைவு செய்திருக்கிறார் ஃபிர்தௌஸ்.

மஹல்லாவாசிகளின் கதை ஒரு நாவலுக்கான களம். நிறைய சொல்ல இருக்கின்றது; கொஞ்சமாய்ச் சொல்லி இருக்கிறார். எல்லா ஜமாத்துகளிலும் என்ன நடந்து கொண்டிருக்கின்றது மொஹல்லாவாசிகளின் ஒற்றுமை எப்படிச் சீர் குலைகின்றது என்பதைக் காட்டும் கதை.  பெண்களின் மீதான ஒரு சிறு கட்டுக்கதை பேச்சுவாக்கில் உலாவந்தால், அது இன்னொரு பெண்ணின் வாழ்நாள் சோதனையாகி விடுகின்றது. திருமணம் முடிந்து சில நாள்களிலேயே அரபுநாட்டுக்குப் பறந்துபோன அம்சா ஒரு செல்போன் மூலம் தன் மனைவியை அதிகாரம் செய்கிறான். அவள் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஏனெனில் ஊரில் கள்ள காஜாக்கள் இருக்கின்றார்கள்; அவர்கள் பெண்களைச் சூறையாடலாம். கதையின் ஆரம்பத்தில் தென்படுகிற தப்லீக் ஜமாத் - அதன் பெயரைச் சொன்னாலே தலைதெறிக்க ஓடுகிறார்கள்; பதுங்குகுழி தேடுகிறார்கள். எங்கள் ஊரில்தான் இந்த ஓட்டம் என்றிருந்தேன்; ஊர் ஊராக இந்தக் கதைதானோ? ஏன் இப்படி ஓடுகிறார்கள் என்பதை தப்லீக் ஜமாத்தார் இன்னும் அறிந்து கொள்ளவில்லை; அதே சமயத்தில் பொது விவகாரங்களில் தப்லீக் ஜமாத்துகளின் பங்களிப்பே இல்லை. அதை இந்தக் கதை குத்திக் காட்டுகிறது. மஹல்லாவின் அசலான மொழி வாசிப்புச் சுவையைக் கொடுக்கின்றது.

முஸ்தபா கமால்பாட்ஷா ஓர் இளம்படைப்பாளி. ஆனால் அது இந்த நாட்டின் கௌரவத்திற்கு உள்ளானதல்ல. அவன் பெயரும் தாடியுமே இங்கு பெரும் பதற்றத்தைத் தருகின்றன. அவனும் போலீஸாரின் கழுகுக் கண்களுக்கும் எள்ளல்களுக்கும் ஆளாகிறான். அவன் இருப்பு ஓர் அபாயம். அவன் மீண்டுவிட்டாலும்கூட அந்த அவமரியாதை சூழ்ந்துவிட்டதே! அதுதான் அவன் கொதிப்புக்குக் காரணம். நாட்டின் ஜனநாயக நெறிமுறைகளைப் போட்டு உடைத்துவிட்டு ஏதேச்சாதிகாரப் பாதையில் போகின்றது இன்றைய அதிகார வர்க்கம்; ஓர் இலக்கியவாதியாக இதை அவன் உணர்வதால்தான, “சமூக ஜனநாயக சக்திகள் மிகப் பலவீனமடைந்திருக்கின்றன. அல்லது வெற்றுக் கூச்சல் போட்டுக்கொண்டு மிகவும் பின்தங்கியிருக்கின்றன... அதுதான் நிலைமை மிகமோசமாக இருக்கிறது” என்று தெளிவாகப் பேசமுடிகிறது அவனால். ஆனால் இதே சூழ்நிலையில் சிக்கிக்கொள்கிற ஒரு பாமர இறை பக்தியாளரால் என்ன அநுமானிக்க முடிகிறது. “துனியா அழியறதுக்கு நாளாயிருச்சு! அதன் அடையாளங்கதா இது...” (பக்,86) இப்படிப் பேசித்தான் சமூகமும் தன் அழிவுக்குப் பின்புலக் காரணமாக உள்ளது.

ராஜகுமாரனின் இந்தக் கதைகளைப் படிக்கக்கூடிய வாசகர்களும இந்த இரண்டும் பார்வைகளுக்குள்தான் இருப்பார்கள்; அவர்கள் முதல் பார்வையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது நல்லது.

இவ்வளவையும் சொல்லிவிட்டு இன்னொன்றையும் சொல்லாமல்போனால் எப்படி? இரண்டு கதைகள் தவிர பாக்கியுள்ள நான்கு கதைகளுமே முஸ்லிம்களால் நடத்தப்படாத கணையாழி மற்றும் யுகமாயினி இதழ்களில் பிரசுரமானவையென்பதும், முஸ்லிமல்லாத பதிப்பகமே இதை வெளிக்கொண்டு வந்திருக்கின்றது என்பதுமே அந்த முக்கியச் செய்தி.

நன்றி: உயிர் எழுத்து, ஆகஸ்ட் 2011

Tuesday, 22 March 2011

புத்தகங்கள் கிடைக்குமிடங்கள்

சென்னை:
நியு புக் லேண்ட்ஸ் - 044 28156006,
பாரதி புத்தகாலயம் - 044 24332924,
கீழைக்காற்று வெளியீட்டகம் - 044 28412367,
இலக்கியச் சோலை - 044 25610969,
சாஜிதா புக் சென்டர் - 99411 75303
புலம் வெளியீடு - 9840603499
பயணி - 9445124576

மதுரை: பாரதி புத்தகாலயம் - 0452 2324674,
அஹத் பப்ளிஷர்ஸ் - 93450 55666

கோவை: விடியல் பதிப்பகம் - 0422 2576772

பொள்ளாச்சி: எதிர் வெளியீடு - 98650 05084

மற்றும் பிற முன்னணி விற்பனையகங்களில்

Sunday, 20 March 2011

என்ன நடக்குது மத்திய கிழக்கில்?


சோறு சுதந்திரம் சுயமரியாதை

துனீசியா, எகிப்து, லிபியா, பஹ்ரைன் என மக்கள் எழுச்சி தொடர்கிறது.
வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக வீற்றிருந்த சர்வாதிகாரிகள் ஒவ்வொருவராக ஆட்சிப் பீடத்திலிருந்து துரத்தப்படுகிறார்கள்.

ஒரு புறம் இராணுவம் எல்லா வகையான ஆயுதங்களையும் பிரயோகிக்கத் தயாராக நிற்க, மறுபுறம் இளைஞர்களும் யுவதிகளும் சாலைகளில் நிரம்பி ஆயுதம் எதுவும் இல்லாமல் அறப்போராட்டம் நடத்தி அரசை ஸ்தம்பிக்கச் செய்தனர். பயங்கரவாதத்தின் பெயரில் வல்லாதிக்க அரசுகள் மக்களைக் கொன்று குவித்து வரும் வேலையில் ஆயுதமின்றி போராடும் இந்த நவீன காந்தியவாதிகளின் உந்துசக்தியாக அமைந்தது என்ன?

கணிப்பொறியின் விசைப்பலகையை மட்டுமே நவீன ஆயுதமாக நம்பிய இந்த திடீர் கிளர்ச்சியை பின்நவீனத்துவ எழுச்சி என்று சுட்ட முடியுமா?

மையப்படுத்தப்பட்ட அமைப்பு, தலைமை, வரையறுக்கப்பட்ட செயல்திட்டம் இவை எதுவும் இல்லாமல் வீதிகளில் திரண்ட இந்தப் பெருந்திரள் மக்கள் போராட்டத்தை புரட்சி என்று அழைக்க முடியுமா?

என்ன நடக்குது மத்திய கிழக்கில்?
நூல் வெளியீடு மற்றும் கருத்தரங்கம்


இடம்: மாவட்ட மைய நூலகம் சிற்றரங்கம் (LLA பில்டிங்)


நாள்: 01.04.2011


நேரம்: மாலை 6 மணி முதல் 9 மணி வரை.


பங்குபெறுவோர்:முனைவர் மணிவண்ணன்,
பேரா. அரசியல் அறிவியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.


துரைசிங்கவேல்,
ஆசிரியர், புதிய போராளி.


எஸ்.எம். ரஃபீக் அஹமது,
மாநிலப் பொதுச் செயலாளர், இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (SDPI)


சு.பொ. அகத்தியலிங்கம்,
ஆசிரியர், தீக்கதிர்.

இவர்களுடன்பேரா. அ. மார்க்ஸ்.

Friday, 18 March 2011

வளர்ச்சி - இடப்பெயர்வு - மறுவாழ்வுவளர்ச்சிக்கும் அடிப்படை உரிமைகளுக்குமான முரண் தற்போது உலகில் முக்கிய பேசு பொருளாகியுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகப் பெரிய அளவில் இன்று நிலப்பறிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

சென்னையை உலகத் தரமான ‘சிங்காரச் சென்னை’யாக மாற்றும் முயற்சியில் குடிசை மக்கள் வெளியேற்றப்பட்டு அவர்களது வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுகின்றன.

பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம் என்கிற பெயரில் வீடற்றோர் கட்டாயமாக அகற்றப்படுகின்றனர்.

இத்தகைய நடவடிக்கைகளைச் சட்டப்புர்வமாக்கும் திட்டத்துடன் இந்திய அரசு நிலப்பறிப்பு மற்றும் மறுவாழ்வு தொடர்பாக புதிய கொள்கை அறிவிப்பு, புதிய சட்டம் இயற்றுதல் ஆகிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இவை குறித்த நுண்மையான ஆய்வாக அமைந்துள்ளது இந்நூல்.

நூல்: “சிங்காரச் சென்னையும் சீரழியும் வாழ்வுகளும்”
ஆசிரியர்: அ. மார்க்ஸ்.
விலை : ரூ. 45

Tuesday, 15 March 2011

வன்முறை / எதிர்வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு...


பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு முன் / பின் என இடைக்கோடிட்ட சுதந்திர இந்தியாவின் வரலாற்றுப் பக்கங்களில், தமிழகம் குறித்து கட்டமைக்கப்பட்ட அமைதிப் பூங்கா என்ற சித்திரம், கோவையில் நடந்த குண்டுவெடிப்புகளால் கலைத்துப் போடப்பட்ட பின்னணியில், அங்கு வாழும் இஸ்லாமியர்களின் சமூக, பொருளாதார வாழ்வினூடாக வகுப்புவாதத்தின் மூலாதாரத்தையும், வன்முறை மற்றும் எதிர்வன்முறைச் செயல்பாடுகளின் பாதிப்புக் கோரங்களையும் தன்னுடைய மின்னல் எழுத்துக்களால் நெடுங்கதைகளாக... மிர்ஸா காலிபின் கவிதை வரிகளைத் தலைப்பாகக் கொண்ட இந்த நூலின் வழியாக நம் கண்கள் பனிக்கச் செய்கிறார் ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன். ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், இரு குறுநாவல்கள் எழுதியிருக்கும் இவரின் முதல் கதைத் தொகுப்பு நூல் இது.

இந்நூலுக்கு தோழர். ஆதவன் தீட்சண்யா எழுதிய முன்னுரையை இங்கே சென்று படிக்கலாம். அதனை இங்கும் பதிந்துள்ளோம்.

ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் தமிழில்

இந்திய முஸ்லிம்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய பிரிட்டிஷ் ஆட்சியில் அமைக்கப்பட்ட ஹண்டர் கமிஷன் (1871) தொடங்கி இன்றைய ரங்கனாத் மிஸ்ரா ஆணையம் வரை வழங்கியுள்ள பரிந்துரைகள் முதன் முதலாகத் தமிழில் பெயர்க்கப்பட்டுள்ளன.
வகுப்புவாதம் X  மதச்சார்பின்மை குறித்து இந்திய அளவில் நடைபெறும் விவாதங்கள் குறித்த ஆய்வுக் கட்டுரை ஆழமாக இந்த அம்சங்களைத் தொட்டுச் செல்கிறது.