Friday, 19 August 2011

மதங்கள் நமக்குத் தந்த (மிச்சம்) உச்சம்

“குஜராத் பயங்கரவாதத்தில் பெற்ற தாயும், தாலி கட்டிக் கொண்ட மனைவியும் முஸ்லிம் பெண்களைக் கற்பழித்து வரச்சொல்லி தன் மகனை, தன் கணவனை அனுப்பி வைத்திருக்கிறார்கள். எப்போதும் துடித்து நிற்கும் ஆண்குறிகளுக்கு இதைவிட வேறென்ன பேரானந்தம் வேண்டும்?”


நகரமே ஓநாய்கள் ஊளையிடும் பாலைவனம் போல
களந்தை பீர் முகம்மது

ஃபித்தௌஸ் ராஜகுமாரன் கொந்தளிப்பான சூழல்கொண்ட மண்ணில் வாழ்பவர். இன்னும் கொஞ்சம் நெருங்கிச் சொல்வதென்றால் பாசிசத்தின் குறியிலக்குகளில் அவரும் இருக்கக்கூடியவர். தமிழகத்தின் இதர முஸ்லிம் படைப்பாளிகளுக்கும் அவருக்குமான முககிய வேறுபாடு இது. எனவே, இந்தக் கதைகளை அவர் எழுதியே தீர வேண்டும். மதவாதம் வக்கரித்துப்போன சம்பவக் கொடூரங்களை இந்தக் கதைகள் படம்பிடித்துள்ளன. அவர் ஏற்கனவே எழுதிய கதைகளை அசைபோட்டவர்களுக்கு, இந்தக் கதைகளை ஏற்கின்ற மனப்பாங்கு வந்துவிடும்.

மதவாதமும் சாதீய வாதமும் நாம் விரும்பாத சுமைகள். ஆனால் எவனெவனோ அந்தச் சுமைகளை இழுத்து வந்து நம் தலைகளில் ஏற்றிவைத்து விடுகிறான்கள்; அவற்றைச் சுமக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார்கள். விரும்பாத அந்தச் சுமைகளின் கீழே நாம் அமுங்கி விடுகிறோம். வாழ்வின் ஒரு பகுதியை, ஒரு நாளை, ஒரு மணி நேரத்தைத அல்லது சில நிமிசங்களையாவது மதவாதத்தின் பக்கம் நின்று கழித்தவர்களாக நாம் வெளியேறுகிறம்; அல்லது பிறர் பார்வைகளில் நாம் அவ்வாறு தென்படு விடுகிறோம்! எவ்வளவு அருவருப்பான வாழ்க்கை இது? என்னுடைய மதத்தின் மீது நானும் வெறிகொண்டவனாக இருப்பதற்கே, எதிர்மதத்தின் வெறியன் விரும்புகிறான். என்னைக் கொலை செய்வதற்கான நியாயமான காரங்களை, அவன் இந்தச் சாய்விலிருந்துதானே பெறமுடியும்?

குஜராத் பயங்கரவாதத்தில் பெற்ற தாயும், தாலி கட்டிக் கொண்ட மனைவியும் முஸ்லிம் பெண்களைக் கற்பழித்து வரச்சொல்லி தன் மகனை, தன் கணவனை அனுப்பி வைத்திருக்கிறார்கள். எப்போதும் துடித்து நிற்கும் ஆண்குறிகளுக்கு இதைவிட வேறென்ன பேரானந்தம் வேண்டும்? சிற்றின்பச் சாகரம்தான் ஆன்மீகப் பேரின்பத்தின் நுழைவாயில் என்பதை முகமூடியில்லாத நித்யானந்தா, பிரேமானந்தா சுவாமிகளைப் போல நிரூபித்திருக்கின்றது குஜராத். மதங்கள் நமக்குத் தந்த உச்சம் இதுதான். ஃபிர்தௌஸ் ஏன் இவற்றையெல்லாம் எழுதினார் என்பதற்கு இவைதாம் காரணம்.

‘நகரமே ஓநாய்கள் ஊளையிடும் பாலைவனம்போல’ என்கிற தலைப்புக் கதைதான் தொகுப்பின் கடைசிக் கதை. மற்ற கதைகளின் தாங்கு சக்தியும் இதுதான். நம்முடைய உலகின் தார்மீகம் எவ்வளவு கோரமானது. நாம் அழிவின் விளிம்பில் ஓரம் சாய்ந்தவர்களாய் எப்படி ஒற்றைக்காலோடு நிற்கிறோம் என்பதை இந்தக் கதையை வாசிப்பதன் மூலம் புரிந்து கொள்கிறோம். விரக்தியின் மகா வெட்டவெளி அதன் சூன்யத்தைக் காட்டியே நம்மை அச்சுறுத்துகின்றது. அந்த வெறுமையை, நம்மை இழந்து நிற்கும் அந்த இருளைக் கச்சிதமாக வடித்திருக்கிறார் ராஜகுமாரன். இதயத்தின் மீதேறி நிற்கும் சுமையல்லவா?

கோவைக் கலவரச் சூழலைப் படைப்புகளுக்குக் கொண்டுவருவதில் ஆபத்தும் உள்ளது. இருதரப்பிற்கும் நடுவில் படைப்பாளி நிற்க வேண்டும். அதே சமயம் பலிபீடத்தில் பழி தீர்க்கப்படுகிற சமூகம் சார்ந்தவர், படைப்பின் வேகம் பித்துப் பிடித்த நிலையை எட்டிவிட்டால் அது தன்னுடைய கட்டுக்காவல்களை மீறிச் செல்லும். தன் சமூகத்தின் பிணங்களின் நெடி படைப்பின் மொழிவளத்தையும் கலைநயத்தையும் குதறிவிடலாகாது. ஃபிர்தௌஸ் தன்னை மிகவும் கட்டுப்படுத்தியிருக்கிறார்.

ஆன்மீகம் பற்றிப் பேசினால் அனைவருக்கும் மகிழ்ச்சியே. கூடுதலாக இரண்டொருமுறை கடவுளின் நாமத்தை உச்சரிக்க வாய்ப்புக் கிடைத்துவிடுகிறது. கோவில், குளம், தொழுகை, நோன்பு ஆகியவற்றோடு சம்மந்தப்பட்ட நபரை ஒழுக்கமுள்ளவராக, அன்புள்ளம் கொண்டவராக, அமைதிக்குப் பங்கம் தராதவராகக் கருதுவதுதான் மனித இயல்பு என்பதுபோல் ஆக்கிவைத்திருக்கிறோம். அதிலும் இந்தத் தன்மைகள் இளைஞர்களுக்கு இருக்குமென்றால் இன்னும் கொண்டாட்டம்தான். அதனால்தான் கோபாலனிடம் சொல்கிறார் ராவுத்தர், “இதென்ன இந்தத் தடவ பூரா இளவட்டங்களாவே தெரியுது. பசங்க திருந்திட்டாங்க போல”. அந்தத் திருந்திய பசங்கள்தான் மதக்கலவரத்தின் கர்த்தாக்கள். ராவுத்தரின் கடையே தீக்கிரையாகிவிடுகிறது. அரச மரத்தைக் கடையின் அருகில் நீரூற்றி வளர்த்தவர் ராவுத்தர். ஆனால், அதைக் கோயில் மரம் என்று சொந்தம் கொண்டாடுகிறது ஆன்மீக இளைஞர் கூட்டம். இந்த ஆன்மீக இளைஞர்கூட்டம் வைத்த நெருப்பில் இந்த அரச மரமும் - அதுதான் கோயில் மரமும் எரிந்து கருகுகிறது. இப்படித்தான் ஆகிவிடுகிறது ஆன்மீக வெறி! இத்தனை ஆண்டுகளாக இந்தக் கோயிலின் விசேசத்திற்காகவே டவுனிலிருந்து தன் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வருவாள் ராவுத்தரின் மகள் மும்தாஜ். இதை அவள் கணவன் ஜமால் கிண்டல் செய்யும்போது மும்தாஜ் சொல்கிறாள், “எங்க ஊர் கோயில் திருவிழாவ நா பாக்க வேண்டாமாக்கும்?” ஆன்மீக இளைஞர் கூட்டம் தீயிட்டது இந்த இனிய வாழ்க்கைக்கு!

நம் மனசாட்சிகளைக் கேள்விக்கு உள்ளாக்குவதுதான் ஃபிர்தௌஸின் வேலை. நீங்கள் எந்த இறைவனைத் தொழுகிறீர்கள் என்பதல்ல அவரின் கவலை. இந்தக் கதைகளை அணுகவேண்டிய முகவரி இதுதான். ஏராளமான வன்முறைகள், இலட்சக் கணக்கில் படுகொலைகள், இழப்புகள், நெருக்கடிகள், சர்வதேச அவமானங்கள், கண்டனங்கள் என நம்நாட்டைப் பாழாக்கும் இத்தனை இழிவுகள் நம்மைச் சூழும்போதும் நாடு மீண்டும் மீண்டும் அதனையே சந்தித்துக் கொண்டிருக்கிறதென்றால் என்ன அர்த்தம்? இந்த உள்ளுறைவைக் கண்டுபிடிக்கிற வேலை இலக்கியவாதிகளுக்கும் இருக்கிறது. அந்தப் பகுதியை அல்லது கடமையை நிறைவு செய்திருக்கிறார் ஃபிர்தௌஸ்.

மஹல்லாவாசிகளின் கதை ஒரு நாவலுக்கான களம். நிறைய சொல்ல இருக்கின்றது; கொஞ்சமாய்ச் சொல்லி இருக்கிறார். எல்லா ஜமாத்துகளிலும் என்ன நடந்து கொண்டிருக்கின்றது மொஹல்லாவாசிகளின் ஒற்றுமை எப்படிச் சீர் குலைகின்றது என்பதைக் காட்டும் கதை.  பெண்களின் மீதான ஒரு சிறு கட்டுக்கதை பேச்சுவாக்கில் உலாவந்தால், அது இன்னொரு பெண்ணின் வாழ்நாள் சோதனையாகி விடுகின்றது. திருமணம் முடிந்து சில நாள்களிலேயே அரபுநாட்டுக்குப் பறந்துபோன அம்சா ஒரு செல்போன் மூலம் தன் மனைவியை அதிகாரம் செய்கிறான். அவள் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஏனெனில் ஊரில் கள்ள காஜாக்கள் இருக்கின்றார்கள்; அவர்கள் பெண்களைச் சூறையாடலாம். கதையின் ஆரம்பத்தில் தென்படுகிற தப்லீக் ஜமாத் - அதன் பெயரைச் சொன்னாலே தலைதெறிக்க ஓடுகிறார்கள்; பதுங்குகுழி தேடுகிறார்கள். எங்கள் ஊரில்தான் இந்த ஓட்டம் என்றிருந்தேன்; ஊர் ஊராக இந்தக் கதைதானோ? ஏன் இப்படி ஓடுகிறார்கள் என்பதை தப்லீக் ஜமாத்தார் இன்னும் அறிந்து கொள்ளவில்லை; அதே சமயத்தில் பொது விவகாரங்களில் தப்லீக் ஜமாத்துகளின் பங்களிப்பே இல்லை. அதை இந்தக் கதை குத்திக் காட்டுகிறது. மஹல்லாவின் அசலான மொழி வாசிப்புச் சுவையைக் கொடுக்கின்றது.

முஸ்தபா கமால்பாட்ஷா ஓர் இளம்படைப்பாளி. ஆனால் அது இந்த நாட்டின் கௌரவத்திற்கு உள்ளானதல்ல. அவன் பெயரும் தாடியுமே இங்கு பெரும் பதற்றத்தைத் தருகின்றன. அவனும் போலீஸாரின் கழுகுக் கண்களுக்கும் எள்ளல்களுக்கும் ஆளாகிறான். அவன் இருப்பு ஓர் அபாயம். அவன் மீண்டுவிட்டாலும்கூட அந்த அவமரியாதை சூழ்ந்துவிட்டதே! அதுதான் அவன் கொதிப்புக்குக் காரணம். நாட்டின் ஜனநாயக நெறிமுறைகளைப் போட்டு உடைத்துவிட்டு ஏதேச்சாதிகாரப் பாதையில் போகின்றது இன்றைய அதிகார வர்க்கம்; ஓர் இலக்கியவாதியாக இதை அவன் உணர்வதால்தான, “சமூக ஜனநாயக சக்திகள் மிகப் பலவீனமடைந்திருக்கின்றன. அல்லது வெற்றுக் கூச்சல் போட்டுக்கொண்டு மிகவும் பின்தங்கியிருக்கின்றன... அதுதான் நிலைமை மிகமோசமாக இருக்கிறது” என்று தெளிவாகப் பேசமுடிகிறது அவனால். ஆனால் இதே சூழ்நிலையில் சிக்கிக்கொள்கிற ஒரு பாமர இறை பக்தியாளரால் என்ன அநுமானிக்க முடிகிறது. “துனியா அழியறதுக்கு நாளாயிருச்சு! அதன் அடையாளங்கதா இது...” (பக்,86) இப்படிப் பேசித்தான் சமூகமும் தன் அழிவுக்குப் பின்புலக் காரணமாக உள்ளது.

ராஜகுமாரனின் இந்தக் கதைகளைப் படிக்கக்கூடிய வாசகர்களும இந்த இரண்டும் பார்வைகளுக்குள்தான் இருப்பார்கள்; அவர்கள் முதல் பார்வையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது நல்லது.

இவ்வளவையும் சொல்லிவிட்டு இன்னொன்றையும் சொல்லாமல்போனால் எப்படி? இரண்டு கதைகள் தவிர பாக்கியுள்ள நான்கு கதைகளுமே முஸ்லிம்களால் நடத்தப்படாத கணையாழி மற்றும் யுகமாயினி இதழ்களில் பிரசுரமானவையென்பதும், முஸ்லிமல்லாத பதிப்பகமே இதை வெளிக்கொண்டு வந்திருக்கின்றது என்பதுமே அந்த முக்கியச் செய்தி.

நன்றி: உயிர் எழுத்து, ஆகஸ்ட் 2011

1 comment:

sdpi-tnelections2011 said...

Great thoughts indeed make up a Great Human! Congratulations Muran...